தேசிய கால்பந்து லீக் சர்ச்சை : டிரம்ப்பிற்கு வலுக்கும் எதிர்ப்பு...!

அதிபர் டிரம்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் விளையாட்டு வீரர்கள் கரங்களை இறுகக்கட்டி முட்டியிட்டனர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அதிபர் டிரம்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் விளையாட்டு வீரர்கள் கரங்களை இறுகக்கட்டி முட்டியிட்டனர்
பிரசுரிக்கப்பட்டது

சக விளையாட்டு வீரர்களுக்கு எதிராக, `மனதை புண்படுத்தக்கூடிய` மற்றும் `பிரிவினையை` தூண்டும் வகையில் பேசியதாக அதிபர் டிரம்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமெரிக்காவின் தேசிய கால்பந்து லீக் (என்.எஃப்.எல்) விளையாட்டு வீரர்கள் கரங்களை இறுகக்கட்டி முட்டியிட்டனர்.

தேசிய கீதத்துக்கு எழுந்து நிற்காத விளையாட்டு வீரர்களை அணியிலிருந்து நீக்க வேண்டும் அல்லது இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று டிரம்ப் அண்மையில் பேசி இருந்தார். அதுதொடர்பாக மிகக்கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தியிருந்தார். இது விளையாட்டு உலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. டிரம்பின் இந்தப் பேச்சுக்கு எதிராக விளையாட்டு வீரர்கள், அணி உரிமையாளர்கள் கருத்துகளை பதிவு செய்து இருந்தனர்.

கடந்த ஆண்டு, வீரர் கொலின் கேப்பர்னிக் பாகுபாட்டுடன் அமெரிக்க கறுப்பு இனத்தவர் நடத்தப்படுவதற்கும், போலீஸ் வன்முறைக்கும் எதிராக தன் எதிர்ப்பை பதிவு செய்ய அமெரிக்க தேசிய கீதம் பாடப்படும் போது தம் கரங்களை இறுகக்கட்டி, முட்டியிட்ட நிலையில் அமரும் எதிர்ப்பு இயக்கத்தை தொடங்கினார்.

பணிநீக்கம் செய்:

வெள்ளிக்கிழமை தமது ஆதரவாளர்களுக்கு மத்தியில் உரையாற்றும் போது, இந்த எதிர்ப்பு இயக்கத்தை குறிப்பிட்டுப் பேசிய அதிபர் டிரம்ப், "ஒருவர் நமது தேசிய கொடியை மதிக்காதபோது, அவரை உடனே பணிநீக்கம் செய்யவேண்டும் அல்லவா?'' என்று பேசினார்.

இதற்கு விளையாட்டு வீரர்கள் வார இறுதி விளையாட்டு நிகழ்வின்போது தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்தனர். சனிக்கிழமை இரவு நிகழ்ந்த விளையாட்டு நிகழ்வின் போது, ஓக்லாந்து பேஸ்பால் விளையாட்டு வீரரான ப்ரூஸ் மேக்ஸ்வெல், அமெரிக்க தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது முட்டியிட்ட நிலையில் அமர்ந்து தம் எதிர்ப்பை பதிவு செய்தார்.

அதிபர் டிரம்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் விளையாட்டு வீரர்கள் கரங்களை இறுகக்கட்டி முட்டியிட்டனர்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, அதிபர் டிரம்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் விளையாட்டு வீரர்கள் கரங்களை இறுகக்கட்டி முட்டியிட்டனர்

ஞாயிற்றுக்கிழமை நடந்த என்.எஃப்.எல் விளையாட்டு நிகழ்வின் போதும் பல்வேறு அணியினர் டிரம்பின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் வண்ணம் தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்தனர். குறிப்பாக, சியாட்டல் சீயாக்ஸ் அணி மற்றும் டென்னிசி டைட்டன்ஸ் அணி விளையாட்டு வீரர்கள் ஆட்டம் தொடங்குவதற்கு முன் இசைக்கப்பட்ட தேசிய கீத நிகழ்வில் பங்குபெறவில்லை. சிகாகோவிலும் பிட்ஸ்பர்க் ஸ்டீலர்ஸ் அணி இவ்வாறே செய்தது.

மேலும், சீயாக்ஸ் மற்றும் டைட்டன்ஸ் இடையிலான விளையாட்டு போட்டியில் தேசிய கீதத்தை பாடியவர், தேசிய கீதம் இசைக்கப்பட்டவுடன் முட்டியிட்டு அமர்ந்தார்.

குறிப்பிடத்தக்க ஒரு நிகழ்வாக, டிரம்பின் பிரசாரத்திற்கு ஒரு மில்லியன் டாலர் (740,000 பவுண்டுகள்) நன்கொடை அளித்த ஜாக்சன்வில் ஜாக்குவார்ஸ் அணியின் உரிமையாளர் சாஹித் கான், தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது தன் அணியினருடன் இணைந்து கொண்டு மைதானத்தில் இறங்கி தம் கரங்களை கட்டிக் கொண்டார். அணியின் உரிமையாளர்கள் மைதானத்துக்கு வருவது அரிதான செயல்.

மற்றொரு பக்கம் சில பார்வையாளர்கள், வீரர்களின் இந்த நடவடிக்கைக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை தெரிவித்து கூச்சலிட்டனர்.

எதிர்ப்பு தெரிவித்த என்.எஃப்.எல்:

என்.எஃப்.எல் -ம் டிரம்பின் கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது. அதன் ஆணையர் ரோஜர்ஸ் குட்வெல் ஒரு ட்விட்டர் பதவில், "இதுபோன்ற பிளவுபடுத்தும் கருத்துக்கள் துரதிர்ஷ்டவசமாக மரியாதையின்மையை நிரூபிக்கின்றன" என்று கூறியுள்ளார்.

"கடந்தகால மற்றும் நிகழ்கால சமூக உரிமை கதாநாயகர்களின் முகங்களில் விழுந்த அறை" என்று டிரம்பின் கருத்துக்களை ஒரு பதிவில் வர்ணித்துள்ளார் என்.எஃப்.எல் வீரர்கள் சங்கத்தின் தலைவர் எரிக் வின்ஸ்டன்.

தேசிய கீதத்துக்கு எழுந்து நிற்காத வீரர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று பேசிய டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தேசிய கீதத்துக்கு எழுந்து நிற்காத வீரர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று பேசிய டிரம்ப்

அழைப்பை திரும்பபெற்ற டிரம்ப்:

இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் கூடைப்பந்தாட்ட சாம்பியனான கோல்டன் ஸ்டேட் வாரியர்ஸ் அணிக்கு விடுக்கப்பட்ட அழைப்பை டிரம்ப் திரும்ப பெற்றது புதிய விமர்சனங்களை எழுப்பி உள்ளது.

டிரம்ப் கூடைப்பந்தாட்ட சாம்பியனான கோல்டன் ஸ்டேட் அணியை வெள்ளை மாளிகைக்கு அழைத்து இருந்தார். ஆனால், அந்த அணியின் ஒரு வீரர், ஸ்டீஃபன் கரி,தான் அங்கு செல்ல விரும்பவில்லை என்று கூறி இருந்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக டிரம்ப், "வெள்ளை மாளிகைக்கு செல்வது ஒரு சாம்பியன்ஷிப் அணிக்கு மாபெரும் கெளரவமாக கருதப்படுகிறது. ஸ்டீஃபன் கரி தயக்கம் காட்டுவதால் நான் அழைப்பை திரும்ப பெறுகிறேன் " என்று பதிவிட்டார்,

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :