ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்
கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.
யானை தந்தம் விற்பனை

பட மூலாதாரம், Simon Maina/FP/getty images
யானை தந்தங்களை விற்பனை செய்வதை தடை செய்வதற்கு ஆதரவாக ஹாங்காங் நாடாளுமன்ற உறுப்பினரகள் வாக்களித்துள்ளனர். கடந்த ஆண்டு இறுதியில் சீனா, யானை தந்தம் விற்பனைக்கு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது. யானை தந்தங்கள் விற்பனை செய்வதை பகுதி பகுதியாக குறைத்து 2021 ஆம் ஆண்டுக்குள் ஹாங்காங்கில் தந்தம் விற்பனை முழுவதுமாக தடை செய்யப்படும். உலகின் மிகப்பெரிய யானை தந்த சந்தை ஹாங்காங் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலியல் குற்றச்சாட்டு

பட மூலாதாரம், Reuters
ஜிம்னாஸ்டிக் வீரர்களுக்கான மருத்துவர் லாரி நாசரால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 265 ஆக உயர்ந்துள்ளது என்று நீதிபதி கூறி உள்ளார். லாரி நாசரால் துன்புறுத்தலுக்கு உள்ளான பெண்கள் ஏற்கெனவே சாட்சியங்களை அளித்ததை அடுத்து கடந்த வாரம் 175 ஆண்டு சிறை தண்டனை அவருக்கு விதிக்கப்பட்ட நிலையில் அவரால் பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொலையில் இன்பம்

பட மூலாதாரம், EPA
ஒன்பது வயது சிறுவனையும், தனது முன்னாள் பள்ளித் தோழரையும் கொடூரமாக கொன்ற ஜெர்மன் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஜெர்மன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொலையாளியின் பெயர் மார்சல். கொலையாளிக்கு எதிராக நீதிமன்றத்ததில் வழக்காடிய வழக்கறிஞர்கள் அந்த இளைஞரை `கொலையில் இன்பம் காண்பவர்` என்று வர்ணித்தனர், கொலையான சிறுவன் உடலில் 51 கத்தி குத்துகள் இருந்ததே இதற்கு காரணம்.

பயங்கரவாதி

பட மூலாதாரம், AFP
பாலத்தீன் ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவரான இஸ்மாயில் ஹனியாவை `பயங்கரவாதி` என்று அறிவித்து, அவருக்கு பல்வேறு தடைகளை விதித்துள்ளது அமெரிக்கா. ஹமாஸ் அமைப்பு முன்பே பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா, இஸ்ரேல், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் அறிவித்து இருந்தன.

ரயில் விபத்து

பட மூலாதாரம், EPA
அமெரிக்க குடியரசு கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்ற ரயில் லாரியுடன் மோதியதில், லாரியின் ஓட்டுநர் பலியானார். இந்த விபத்து வெர்ஜீனியா பகுதியில் நடந்துள்ளது. ரயில்களும் கார்களும் மோதி விபத்துக்கு உள்ளாவது அமெரிக்காவில் அதிகரித்துள்ளதாக அந்நாட்டின் ஒன்றிய தண்டவாள சாலை நிர்வாக அமைப்பு கூறி உள்ளது. இதற்கு காரணமாக வாகனங்கள் பெருக்கம் கூறப்படுகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்
































