தமிழகத்தின் தலைமைத் தகவல் ஆணையராக ஆளுநரின் செயலர் நியமனம்

பட மூலாதாரம், DIPR
தமிழ்நாட்டின் புதிய தலைமைத் தகவல் ஆணையராக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் செயலராக இருந்த ஐஏஎஸ் அதிகாரியான ஆர். ராஜகோபால் நியமிக்கப்பட்டிருக்கிறார். ஆளுநரின் புதிய செயலராக ஆனந்த் ராவ் விஷ்ணு பாடீல் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
தமிழகத்தின் தலைமைத் தகவல் ஆணையராக டாக்டர் ஷீலா ப்ரியா கடந்த 2017 டிசம்பர் 8ம் தேதி பொறுப்பேற்றார். அவருக்கு 65 வயதானதையடுத்து அவருடைய பதவிக்காலம் மே மாதம் முடிவடைந்தது.
தலைமைத் தகவல் ஆணையர் பதவிக்கு ஆகஸ்ட் 13ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனக் கடந்த ஜூலை மாதம் தமிழக அரசு அறிவித்தது. முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர், அமைச்சர் ஆகியோர் அடங்கிய மூன்று பேர் அடங்கிய குழுதான் தகவல் ஆணையரைத் தேர்வு செய்யும்.
இந்தக் கூட்டம் நவம்பர் 18ஆம் தேதி நடக்குமெனக் கூறப்பட்டிருந்தது. இது தொடர்பான கடிதம் எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், இந்தக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லையென மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
"மாநிலத் தகவல் ஆணையர் பதவிக்கு எத்தனை பேர் விண்ணப்பித்தார்கள்? அவர்களின் பயோ டேட்டா உள்ளிட்ட எந்தத் தகவல்களும் கடிதத்துடன் இணைக்கப்படவில்லை. மிகவும் அவசியமான அடிப்படைத் தகவல்களே கடிதத்தில் இணைக்கப்படாததால், தேர்வுக் குழுவின் பரிந்துரைகளை ஆழ்ந்து பரிசீலனை செய்து, கருத்துக்களைத் தெரிவிக்கும் வாய்ப்பு திட்டமிட்டு மறுக்கப்பட்டுள்ளது" என மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்தார்.

பட மூலாதாரம், FACEBOOK/MK STALIN
முன்கூட்டியே தகவல் ஆணையரை முடிவுசெய்துவிட்டு பெயருக்குக் கூட்டத்தை நடத்துவதாகவும் வெளிப்படைத் தன்மை துளியும் இல்லாத கூட்டத்தில் தான் பங்கேற்கப்போவதில்லையென்றும் அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில் புதிய தலைமைத் தகவல் ஆணையராக ஆளுநரின் செயலராக இருந்த ஆர். ராஜகோபால் நியமிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 1984ஆம் ஆண்டு பேட்சைச் சேர்ந்த ஆர். ராஜகோபால் கூடுதல் தலைமைச் செயலர் அந்தஸ்தில் கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்தப் பதவியை அவர் வகித்துவருகிறார்.
கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களில் ஆட்சியராக பணியாற்றியுள்ள ஆர். ராஜகோபால், சுற்றுச்சூழல் துறை, இளைஞர் நலத்துறை, சிமெண்ட் கார்ப்பரேஷன், வேளாண்மைத்துறை உள்ளிட்ட துறைகளில் பணியாற்றியிருக்கிறார். அடுத்த 3 ஆண்டுகளுக்கு இந்தப் பதவியை ராஜகோபால் வகிப்பார்.
தமிழகத் தகவல் ஆணையத்தின் தலைமைத் தகவல் ஆணையராக ஓய்வுபெற்ற அதிகாரிகளே நியமிக்கப்பட்டுவந்த நிலையில், அந்தப் பதவியில் தற்போது பணியில் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமிக்கப்பட்டிருக்கிறார்.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மேலாண் இயக்குனராக இருந்த ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டீல், தமிழக ஆளுநரின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்
































